கிரிக்கட் சபை தொடர்பில் அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்ட அவதூறான கருத்துக்கள் தொடர்பில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபை 2.4 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
அமைச்சரின் தொடர்ச்சியான மற்றும் அவதூறு அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், தமது நற்பெயரை பாதுகாக்க தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை கூறியுள்ளது.
அமைச்சரின் தவறான மற்றும் அவதூறு பரப்பும் குற்றச்சாட்டுக்கள் இலங்கை கிரிக்கெட்டின் நன்மதிப்புக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கை கிரிக்கெட் சபையானது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நியாயமாக செயற்பட்டு வருவதாகவும் இன்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் அதன் உறுப்பினர்களின் நற்பெயரைப் பாதுகாக்கவும் விளையாட்டின் உணர்வை ஊக்குவிப்பதிலும், வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதே சட்டநடவடிக்கைக்கு காரணம் என்றும் அறிவித்துள்ளது.