சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலை செல்வது வழக்கம். நடப்பாண்டில் கார்த்திகை மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது.
ஐயப்பன் சந்நிதியில் இன்று மாலை தீபம் ஏற்றிய பின்னர், ஆழி குண்டத்தில் நெருப்பு ஏற்றப்படும். அதன்பிறகு நாளை அதிகாலை 3 மணிக்கு தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக் காலம் தொடங்கும். 3.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பிறகு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
நாளை முதல் நாள்தோறும் அதிகாலை 3.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு திருவிதாங்கூர் மன்னர் காணிக்கையாக வழங்கிய 420 சவரன் தங்க அங்கி அணிவிக்கப்படுவதும் வழக்கம். 41 நாட்கள் நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு, டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு அத்தாழ பூஜைக்குப் பின்னர் கோயில் நடை அடைக்கப்படும்
பின்னர் டிசம்பர் 30ஆம் திகதி மீண்டும் நடை திறக்கப்பட்டு ஜனவரி 15ஆம் திகதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு புகழ்பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. ஜனவரி 20ஆம் திகதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும்.
ஐயப்பனை தரிசனம் செய்ய sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு கட்டாயம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.