பொருளாதார குற்றவாளிகள் என உயர்நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் குடியுரிமையை இரத்து செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவாட் கப்ரால், பி.பீ. ஜயசுந்தர, டபிள்யு. டி. லக்ஷ்மன், ஆட்டிகல உள்ளிட்ட தரப்பினர் தான், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என உயர்நீதிமன்றம் விசேட தீர்ப்பொன்றை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்களிடம் கேள்வியொன்று தற்போது எழுந்துள்ளது.
அதாவது நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு தள்ளிய இந்தத் தரப்பினருக்கு எதிராக ஏன் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று.
இந்தத் தரப்பினருக்கு இன்னமும் சிவில் உரிமைகளை வழங்குவது தகுதியற்ற விடயம் என்றும் நாட்டின் பெரும்பாலானோர் தற்போது கருதுகின்றனர்.
எனவே, உயர்நீதிமன்றினால் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தரப்பினரின் குடியுரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இதுதொடர்பாக ஜனாதிபதி விசேட ஆணைக்குழு ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதியால் மட்டும்தான் இதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும்.
எனவே, இந்த குற்றவாளிகளின் குடியுரிமையை இரத்து செய்ய ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என 220 இலட்சம் மக்கள் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.
அத்தோடு, இவர்களினால் தொழில் இழந்த, வியாபாரத்தில் நஷ்டமடைந்த, உயிர் இழப்புக்களை எதிர்க்கொண்ட, வாழ்வாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள நாட்டின் அனைத்து மக்களுக்கும், இவர்கள் ஊடாக நஷ்ட ஈட்டை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டையும் நாம் சட்டரீதியாக மேற்கொள்ளவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.