இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மோசடி தொடர்பிலான குற்றப்புலனாய்வு பிரிவினரின் சோதனை நடவடிக்கைகள் குறித்து தமக்கு பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசி மோசடி தொடர்பில் அரச மருத்துவ விநியோக பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள் நால்வர் நேற்று குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.
மருத்துவ விநியோகப் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க, உதவிப் பணிப்பாளர் தேவசாந்த சாலமன், கணக்காளர் நேரன் தனஞ்சய மற்றும் பங்குக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய மருந்தாளர் சுஜித் குமார ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று பிற்பகல் மாளிகாகந்த நீதிபதி லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மருத்துவ விநியோக பணிப்பாளர் வைத்தியர் கபில விக்ரமநாயக்கவின் அலுவலகத்தில் காணப்படும் ஆவணங்களை சோதனை செய்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கும் நீதிபதி லோச்சனா அபேவிக்ரம அனுமதி வழங்கியிருந்தார்.
இந்தநிலையில் மருத்துவ விநியோக பணிப்பாளரின் அலுவலகத்தை சோதனையிடுவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இன்று கொழும்பில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்திற்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.