ஹமாஸ் போராளிக் குழுவுடன் 4 நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேலின் அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த 6 வாரங்களாக தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் மோதலை நிறுத்தவும் காசா பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்கவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி காசாவில் தனது தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும் அதேவேளை ஹமாஸ் தன்னிடம் உள்ள 240 பணயக்கைதிகளில் 50 பேரையாவது விடுவிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வர இஸ்ரேல் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் இன்றிரவு, இந்த இலக்கை அடைவதே முதல் கட்டம் என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இஸ்ரேல் சுமார் 150 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பதாகவும், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக காசாவிற்கு மேலதிக மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும் என்றும் கூறியுள்ளது.
இருப்பினும் அமெரிக்கா மற்றும் கட்டாரால் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.