தகவல்மாவீரர் தினம் நாளைய தினம் அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது
அரசியல் மாற்றங்கள், அரசியல் குழப்ப நிலை மற்றும் சில அரசியல்வாதிகளின் விளம்பரம் தேடும் முயற்சியாலும் சில இடங்களில் பொலிஸார் மாவீரர் தின நினைவேந்தல் களுக்கு தடை கோரி வருகின்ற நிலையில் சில இடங்களில் மாவீரர் தின நிகழ்வு செயற்பாடுகள் மந்த கதியில் நகர்கின்றது.
எனினும் மன்னாரில் பொலிஸாரின் பல்வேறுபட்ட அழுத்தங்கள் மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களான மாந்தை மேற்கில் உள்ள ஆட்காட்டிவெளி மற்றும் மடுவில் உள்ள பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்கள் தற்போது மாவீரர் குடும்பத்தினராலும் பொது அமைப்புக்களினாலும், பொது மக்களாலும், துப்பரவு செய்யப்பட்டு மாவீரர் நாளுக்காக ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது
குறிப்பாக ஆட்காட்டி வெளி துயிலும் இல்லமானது சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் தின அஞ்சலிக்காக தயாராகி வருகிறது.
சுமார் 1500 மேற்பட்ட மாவீரர்கள் துயில் கொண்டுள்ள மன்னார் ஆட்காட்டிவெளி துயிலும் இல்லம் தற்போது மீண்டும் புத்துயிர் பெறுவது ஒட்டு மொத்த மன்னார் மாவட்ட மக்களையும் மகிழ்ச்சியடையவைத்துள்ளது