முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து அகற்றிய மக்கள் ஊழல் நிறைந்த நிர்வாகத்தை எதிர்பார்க்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை கிரிக்கெட்டை ஊழல்வாதிகளிடம் இருந்து சுத்தப்படுத்தி மீட்கும் வேளையில் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஒட்டுமொத்த மக்களாலும் விரும்பப்படும் கிரிக்கெட் ஊழலால் இன்று பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து அகற்றிய மக்கள் ஊழல் நிறைந்த நிர்வாகத்தை எதிர்பார்க்கவில்லை. ஏகாதிபத்தியவாதிகள் இலங்கை கிரிக்கெட்டில் படையெடுத்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட்டை சுத்தப்படுத்த ரொஷான் ரணசிங்க மேற்கொண்ட முயற்சியில் ஜனாதிபதி மற்றும் சில அமைச்சர்களின் தலையீட்டை யாராலும் மன்னிக்க முடியாது.
ரொஷான் ரணசிங்கவை அமைச்சரவையில் இருந்து நீக்கியதன் பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத கரம் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.
மேலும் அவருக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.