அண்மையில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் கொலை வழக்கானது நேற்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது உயிரிழந்த இளைஞனின் சகோதரன், தந்தை, உள்ளிட்ட ஐவர் நீதிமன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த சாட்சிப் பதிவுகளை அடுத்து வழக்கினை எதிர்வரும் 1ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கும் உத்தரவிட்டார்.
அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் , வழக்கின் மூன்றாவது சாட்சியத்தின் அடிப்படையில் ஐந்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நால்வரை மாத்திரமே கைது செய்துள்ளனர் எனவும், ஏன் மற்றையவரை கைது செய்யவில்லை எனவும் நீதிமன்றில் கேள்வி எழுப்பினர்.
அது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து மற்றைய நபரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.