நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் அண்மையில் ஆற்றிய உரையை சவாலுக்குட்படுத்தியே இன்று சட்டத்தரணி ஒருவரினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக தகுந்த தண்டனைகளை வழங்குமாறும் மனுதாரர் தரப்பு நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.
கிரிக்கெட் சபை சர்ச்சை தொடர்பாக கடந்த காலங்களில் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீதிபதிகளையும் நீதிமன்றத் தீர்ப்புக்களையும் விமர்சிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கு ஆளும் தரப்பினர் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்த நிலையிலேயே, கடந்த திங்கட்கிழமை இவரது அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டதோடு, தற்போது இவருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.