இந்தியாவை தாக்கியுள்ள மிக்ஜாம் புயலினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாளுக்கும் மேலாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக செம்பரபாக்கம் ஏரியில் நீர் அதிகரித்துள்ளது. 8 அடி அளவுக்கு மேலதிக நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குன்றத்தூர் – ஸ்ரீ பெரும்புதூர் வீதி தண்ணீரில் மூழ்கி 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜபுரம் ராயப்பா நகரில் அடையாறு ஆற்றின் கரை உடைந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பூவிருந்தவல்லி – பட்டாபிராம் இடையேயும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மேலும் , ஆவடி , பூவிருந்தவல்லி குடியிருப்புக்கள் , காவல் நிலையங்கள் , வியாபார நிலையங்கள் என அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பூவிருந்தவல்லியில் இருக்கும் பெரிய பள்ளியில் தங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து தற்போது அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சென்னையை அடுத்த போரூர் அருகே வானகரம் பகுதியில் தாம்பரம்-மதுரவாயில் பிரதேசத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.