அடுத்த வருடம் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் வெற்றிபெரும் வேட்பாளர் ஒருவரை தங்கள் கட்சி சார்பில் முன்நிறுத்த தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அடுத்த வருடம் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் கட்சி என்ற ரீதியில் நாங்கள் அதற்கு தயாராகவே இருக்கின்றோம்.
வெற்றிபெறும் வேட்பாளர் ஒருவரை எங்கள் கட்சி சார்பில் நாங்கள் முன்நிறுத்துவோம்.
வேட்பாளராக நிறையப்பேர் இருக்கின்றார்கள். அதிக எதிர்ப்பார்ப்பும் காணப்படுகின்றது.
விவசாயிகள், வியாபாரிகள், அரசியல்வாதிகள் ஜனாதிபதிகள் எனப் பலர் எமது கட்சியுடன் இணைந்து இருக்கின்றார்கள்.
தற்போதுள்ள ஜனாதிபதியை எதிர்வரும் தேர்தல் வரையில் ஜனாதிபதியாக நாங்கள் நியமித்தோம்.
ஆனால் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்போமா என்பது பற்றி தெளிவுபடுத்த முடியாது. கட்சி என்ற ரீதியில் ஒரு கட்சியுடனேயே கலந்துரையாடல்களை முன்னெடுக்க முடியும்.
தனிநபரை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் கலந்துரையாடல்களை முன்னெடுக்க முடியாது.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிக்கின்றோம் ஆனால் எதிர்காலத்தில் பயணிப்பது தொடர்பில் கட்சியுடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானிக்க முடியும்.
தாங்கள் வெற்றிபெறும் சூழல் இருக்கும் போது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நினைத்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.