சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ந்தும் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள பத்தரமுல்ல – பொல்துவ சந்தியில் ஆசிரியர் சங்கங்களினால் பாரிய போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“120 நாட்கள் போராட்டத்தில் நாங்கள் முன்வைத்த 3 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கை மட்டுமே நிறைவேற்றப்பட்டது.
இந்த வருடம் பணம் இல்லை அடுத்த வருடம் பார்ப்போம் என்று கல்வி அமைச்சர் கூறுகின்றார்.
அடுத்த வருடம் நீங்கள் இருக்கப்போவதில்லை. உங்களை நாங்கள் வீட்டுக்கு அனுப்புவோம்.
கல்வித்துறை வீழ்ச்சயடைந்துள்ளது. ஆகவே இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மேலதிக நிதித்தொகையை கல்வித் துறைக்காக ஒதுக்க வேண்டும்.
இதன்மூலம் அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
அவ்வாறு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாங்கள் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.