இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காவலில் வைக்கப்பட்டவர்களின் மரணங்கள், நோயாளிகளின் ஆரோக்கியம், தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களின் பாதுகாப்பு தொடர்பாக தொடர்புடைய நிறுவனங்களுக்கு பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
2023 இன் முதல் ஆறு மாதங்களில் ஆறு காவல் மரணங்கள் மற்றும் இரண்டு என்கவுண்டர் அடங்கலாக 2020 ஜனவரி முதல் இந்த ஆண்டு ஓகஸ்ட் வரை பொலிஸ் சம்பந்தப்பட்ட 24 காவல் மரணங்கள் மற்றும் 13 என்கவுன்டர் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட மற்றும் என்கவுண்டர் மரணங்களைத் தடுப்பதற்கும், அனைத்து நபர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும் பொலிஸாருக்கு பொதுவான வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை நேற்று வழங்கியுள்ளது.
ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிய சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்ந்தும் கண்காணிப்போம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்றாலும் பரிந்துரைகளை வழங்கி அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் செயற்படுத்தப்படுவதை உறுதி செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.