கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அதற்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மீன்பிடிப் படகுகளில் பேட்டரி மோட்டார்கள் போன்ற எரிபொருள் மாற்று வழிமுறைகள் பயன்படுத்தப் படுவதால் மீனவர்களின் உற்பத்திச் செலவு குறைவதோடு, அதன் மூலம் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான விடயம் என்பதால் இராஜதந்திர ரீதியிலேயே அதனை அணுக வேண்டியுள்ளது என்றும் கூறினார்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக பாண்டிச்சேரி மற்றும் தமிழ் நாட்டு அரசு உட்பட இந்திய ஊடகங்களுடன் கலந்தரையாடுவதே சிறந்த தீர்வாக அமையும் என்றும் அதுவே தனது நிலைப்பாடு என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.