1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி மதுரையில் அழகர்சுவாமிக்கும் ஆண்டாளுக்கும் மகனாக பிறந்து அனைவரும் கொண்டாடும் கேப்டனாக மாறிவிட்டார்.
ஏழை , எளியவர்களுக்கு பசியை தெரிய வைக்க கூடாதென அயராது பாடுபட்டவர். சிறு பராயத்தில் அனைவரையும் போல குறும்புத்தனமாய் நண்பர்களுடன் வீதி வழியே சுற்றிதிரிந்து திரையரங்குகளில் எம்.ஜி.ஆரின் எந்த திரைப்படம் வந்தாலும் அதை கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும் என்ற உறுதியோடு பார்த்து நடிப்பை காதலிக்க ஆரம்பித்ததோடு அரசியலையும் காதலிக்க ஆரம்பித்தார்.
படிப்பை கவனிக்காத இவரை தந்தை அழகர் சுவாமி அடிக்கடி அடித்தும் திட்டியும் சினிமாவை கைவிடவில்லை . தனது தந்தையின் அரிசி ஆலையை பார்த்துக்கொள்ளுமாறு கேட்டும் தனக்கு இருந்த நடிப்பின் ஈரப்பால் சென்னைக்கு சென்றார்.
நாம் ஒன்றை எதிர்பார்க்க கடவுள் ஒன்றை கொடுப்பது எப்போதும் வழக்கமான ஒன்று . இவர் எதிர்பார்த்ததற்கு எதிராக சென்னை இருந்தது , இவரின் சினிமா காதலை தவிர அனைத்தும்.
தன்னால் முடிந்த சின்ன வேலைகளை செய்து கொண்டு சினிமாவில் நடிக்கும் நோக்கத்துடன் பல திரைப்பட இயக்குனர்களை சந்தித்து வாய்ப்புகளை தேடி அலைந்தார். இந்த முகம், கருமையான தோல் என்பனவற்றை ரசிக்க மாட்டார்கள் என நிராகரித்தோர் பலர்.
பின்னர் காஜா என்ற இயக்குனர் விஜயராஜ் என்ற பெயரை அந்நேரத்தில் பலரால் கொண்டர்ப்பட்ட ரஜினிகாந்த் என்ற பெயரில் இருந்து காந்த் என்ற பெயரை எடுத்து விஜயகாந்த் என்ற மாற்றியமைத்தார்.
1979 ஆம் ஆண்டு அவரின் ஆசைப்படி அவர் திரையில் அறிமுகமானார். காஜாவின் இயக்கத்தில் “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தாலும் அதில் அவர் பேசப்படவில்லை.
அதன் பின்னர். ஆர். செல்வராஜ் இயக்கத்தில் வெளியான அகல் விளக்கு என்ற திரைப்படத்தில் ஷோபாவுக்கு ஜோடியாக தன் முகத்தை பதிவு செய்தார்.
அடுத்தாண்டில் சாமந்திப்பூ , நீரோடை, தூரத்து இடிமுழக்கம் போன்ற படங்களில் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தியிருந்தாலும் 1981ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை தன்பால் ஈர்த்தார்.
தூரத்து இடிமுழக்கம் என்ற திரைப்படத்தில் இவர் ஒரு மீனவ சமூகத்தை சேர்ந்தவராக நடித்திருந்தார் என்பதை விட வாழ்ந்திருந்தார் என்று தான் கூற வேண்டும் . சட்டம் ஒரு இருட்டறை இவரின் வாழ்க்கையை புரட்டி போட்ட ஒரு திரைப்படமாகும். அரசாங்த்தை எதிர்த்து கேள்வி கேட்கும் இவரின் திரைப்படங்களுக்கு அத்திவாரம் இட்டது சட்டம் ஒரு இருட்டறை.
இதற்கு பின் நடித்த பெரும்பாலன படங்களில் இவர் பேசிய அரசியல் வசனங்கள் ஒவ்வொன்றும் மக்கள் நெஞ்சில் ஆழமாய் பதிந்தன. அலையோசை,ஊமை விழிகள் , பூந்தோட்ட காவல்காரன் போன்ற படங்கள் ஆரம்ப காலங்களில் அவருக்கு ரசிகர்களை கூட்டம் சேர வைத்தது.
கேப்டன் பிரபாகரன் என்ற இவரது 100வது திரைப்படத்தின் பின்னர் இவரை அனைவரும் கேப்டன் என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர். அவரின் அசாத்திய நடிப்பால் புரட்சி கலைஞர் என்ற பட்டம் அவரின் போர்வையாய் ஆகிப்போனது.
1990 ஆம் ஆண்டில் சத்திரியன் , எங்கிட்ட மோதாதே , சிறையில் பூத்த சின்ன மலர் , சந்தன காற்று , புதுப்பாடல்கள் , புலன் விசாரணை போன்ற வெற்றி படங்ளை குவித்ததோடு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு விஜய பிரபாகரன் , சண்முகபாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர். கேப்டனின் படங்களில் வரும் பாடல்கள் கூட இன்று வரை ரசிக்கும் படியாக இருக்கின்றது.
வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு” , ஆடியில சேதி சொல்லி , ராசிதான் கை ராசிதான் , ஆட்டமா தேரோட்டமா போன்ற பாடல்கள் இளசுகளின் வாயில் இன்றும் முனுமுனுக்கும் பாடல்களாகும்.
இவர் சினிமா கலைஞர்களை மதிக்க தெரிந்த கலைஞர் என்பதன் மிகப்பெரிய உதாரபுருஷர். film industry யில் கல்வி பயின்ற பலருக்கு வாய்ப்பு கொடுத்து இயக்குனராக , நடிகர்களாக அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.
கிட்டதட்ட 50ற்கும் மேற்பட்ட இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். விஜயகாந்த்திடம் சென்றால் வாய்ப்பு கிடைக்கும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கைக்கு என்றும் ஏமாற்றம் கிடைத்ததே இல்லை.
ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றும் சுத்திகரிப்பு பணியாளருக்கும் தனக்கு கிடைக்கும் அதே உணவு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்த போது அதிக செலவாகும் என்ற பதிலை கேட்டதும் ஒரு நொடிக்கூட யோசிக்காமல் எனது சம்பளத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியவர்.
திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதை வென்ற இவர் உண்மையில் மக்களின் கஷ்டங்களையும் , பட்டினியையும் இல்லாதொழித்து ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் ஒரு புது அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.
திரையுலகில் அள்ளிக்கொடுத்தவர் எம்.ஜி.ஆர் என்றால் அதை சொல்லிக்கொடுத்தவர் விஜயகாந்த் என நடிகர் சத்யராஜ் கூறியதை போல நிஜ வாழ்க்கையில் ஒரு நாயகனாக வலம் வந்து கருப்பு எம்.ஜி.ஆர் ஆனார்.
நடிகர் சங்கம் பல இலட்சக்கணக்கில் கடனில் தவித்து கொண்டிருந்த போது நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் பொறுப்பேற்றார். அவர் தலைவராக இருந்த காலப்பகுதி நடிகர் சங்கத்தின் பொற்காலம் என்ற கருத்து இன்றளவும் மாறவில்லை. சினிமாவின் உச்ச நட்சத்திரங்களை ஒன்று திரட்டி மலேசியா , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கலை நிகழ்சிகளை நடத்தி அதில் வரும் வருமானத்தை கொண்டு நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தார்.
சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஒரு நாயகனாக வாழ்ந்த இவர் , கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவால் அடிக்கடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நவம்பர் மாதம் 18 ஆம் திகதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக சென்னை மியாட் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறிய நிலையில், கடந்த 11 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய நிலையில், நேற்று மீண்டும் விஜயகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மீண்டும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதவரவாளர்கள், இன்று காலை முதல் அவரது இல்லத்தை சூழ்ந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாத்துறையில் பல்வேறு புரட்சிகளை செய்து, புரட்சிக் கலைஞன், கேப்டன் என ரசிகர்களினால் அன்போடு அழைக்கப்பட்டு வந்த அன்னாரின் இழப்பை முன்னிட்டு, தற்போது பல்வேறு தரப்பினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரச மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தனது நடிப்பாலும் , நல்லெண்ணத்தாலும் மக்கள் மத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய கலைஞன் என்றும் எமது மனதில் கேப்டனாய் பதிந்திருப்பார்.