நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக புதுப்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நகர அபிவிருத்தித் திட்டங்கள் தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையால் வருடாந்தம் வழங்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தாம் திருப்தியடையவில்லை என்றும் அமைச்சர் விசனம் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 31 அபிவிருத்தித் திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டில் மேலும் 12 அபிவிருத்தித் திட்டங்கள் மட்டுமே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக கொழும்பு மற்றும் மேல் மாகாண பிரதேச மாநகர திட்டம், ஹம்பாந்தோட்டை மாநகர திட்டம், கிழக்கு மாகாண சுற்றுலா வலயம் தொடர்பான திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நுவரெலியாவை சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வதற்கான பெரிய கண்டி திட்டமும் இவ்வருடத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2024 மற்றும் 2026 ஆகிய இரண்டு வருடங்களில் 66 அபிவிருத்தி திட்டங்களை வர்த்தமானியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.