இடைநிறுத்தப்பட்ட சுற்றுலா வலயங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட சிகிரியா, தம்புள்ளை மற்றும் திருகோணமலையை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிலையான நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
2019ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பாரிய வருமானத்தை ஈட்ட முடியும் என எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மொத்த செலவு 1045 மில்லியன் ரூபாய் எனவும், 320 மில்லியன் ரூபாய் இந்த வருடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத் துறைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தொல்பொருள் நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் வருமானம் ஈட்டுதல் என்பதோடு சூழல் முகாமைத்துவம் போன்றவை குறித்த திட்டத்தின் இலக்கு எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.