நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான கோரிக்கையை, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள வேட்பாளர்கள் இதனை மேற்கொள்வதாக உறுதியளிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த கால தலைவர்களும் அரசாங்கங்களும் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளை அரசியல் காரணங்களுக்காக முறியடித்தன.
இந்தநிலையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நம்பிக்கை இல்லாத வரையில் இலங்கை ஒரு நாடாக முன்னேற முடியாது. தேசியப் பிரச்சினைக்கு அரசியல் மூலம் மட்டும் தீர்வு காண முடியாது. ஏனெனில் பல்வேறு எதிர்ப்புத் தாக்கங்கள் இருக்கும்.
முன்னதாக 2000 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சித்தார். இது ஒரு மதிப்புமிக்க முன்மொழிவாக இருந்தது.
ஆனால் அரசியல் காரணங்களால் அதை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. உண்மையில், அந்த நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியே சந்திரிக்கா குமாரதுங்கவின் நடவடிக்கையை எதிர்த்தது.
அத்துடன் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு வரைவின் நகலை எரித்த செயற்பாட்டிலும் ஈடுபட்டது.
இந்தநிலையில் நல்லாட்சி அரசாங்க நாட்களில், புதிய அரசியலமைப்பை நிறுவுவதற்கும் அதன்படி செயற்படுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதுவும் குறுகிய அரசியல் மற்றும் இனவாதக் கண்ணோட்டங்களால் தோல்வியடைந்தது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.