சிம்பாவே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்களால் போராடி வெற்றிபெற்றது.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி,இலங்கை அணியின் சூழலில் சிக்கி 44.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது சிம்பாப்வே அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக சிம்பாப்வே அணியின் தலைவர் கிரைக் எர்வின் 82 ஓட்டங்களையும் ரியான் பர்ல் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மகேஷ் தீக்ஷன 4 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் ஜெப்ரி வெண்டர்சே 2 விக்கெட்டுகளையும் தில்ஷான் மதுஷங்க 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து, 209 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இன்னமும் சற்று நேரத்தில் இலங்கை அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
இலங்கை அணி 4 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்த போது அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழந்து வெளியேற பின்னர் 2.2 ஓவரில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழந்தார். இதனால் 16 ஓட்டங்களுக்குள் இலங்கை அணி 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இதனை அடுத்து குஷால் மெண்டிஸ் மற்றும் ஜனித் லியனகே ஜோடி சிறப்பான இணைப்பாட்டத்தை வெளிப்படுத்த, 13 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டது. இதன் பின்னர் 8.15 ற்கு போட்டி மீண்டும் ஆரம்பமான நிலையில் குஷால் மெண்டிஸ் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடந்து ஆடுகளம் புகுந்த சரித் அசலங்க எவ்வித ஓட்டங்களை பெறாமல் ஆட்டமிழக்க 16 ஆவது ஓவர்ரில் 53 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனை தொடர்ந்து சஹான் ஆராச்சிகே எல்.பி.டபிள்யூ முறையில் 21 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.
கடந்த போட்டியோடு சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியிருந்த ஜனித் லியனகே இன்றைய இரண்டவது போட்டியிலேயே அரைசதமடித்தார். அந்தவகையில் 85 பந்துகளில் அவர் அரைசதத்தை பூர்த்தி செய்திருந்தார்.
இதன் பின்னர் ஆடுகளம் புகுந்த தசுன் சானக 7 ஓட்டங்களோடும் தீக்ஷன 18 ஓட்டங்களோடும் ஜனித் லியனகே 95 ஓட்டங்களோடும் ஆட்டமிழக்க இலங்கை அணி 172 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தடுமாறியது. தொடர்ந்து 49 ஆவது ஒவரின் இறுதி பந்தில் வெற்றி இலக்கை கடந்தது.
பந்துவீச்சில் சிம்பாவே அணி சார்பாக ரிச்சர்ட் ங்கரவா 3 மெடின் ஓவர்களோடு 10 ஓவர்கள் வீசி 32 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பறியிருந்தார். இதேவேளை சிக்கந்தர் ராசா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் ஜனித் லியனகே தெரிவு செய்யப்பட்டார்.