” ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”15 வருடங்களுக்கு முன்னர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதி வழங்குவோம் என கடந்த தேர்தல்களின் போது அரசியல்வாதிகள் பலர் வாக்குறுதியளித்திருந்த போதிலும் யாரும் அதனை நிறைவேற்றவில்லை.
லசந்த தனது வாழ்நாளில், மக்களுக்கு உண்மையையும், சமூக அநீதிகளையும், நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த அஞ்சாதும் செயற்பட்டவர் ஆவார். இதன் விளைவாக அவர் தனது உயிரை தியாகம் செய்ய நேரிட்டது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதியாக்கும் பயணத்தில் பல்வேறு விதமான பங்களிப்புகளை வழங்கியவர் லசந்த விக்கிரமதுங்க. எனவே லசந்தவின் கொலையாளிகள் யார் என்பது தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதியிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.
குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துங்கள். நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுங்கள்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.