2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுத் தேர்தலை எதிர்வரும் 2025 ஜனவரியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக்குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான வருடம் எனக் கூறப்பட்டதுடன், இந்த வருடத்தில் குறைந்தது 3 தேர்தல்களாவது நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நிதி நெருக்கடி காரணமாக இந்த வருடத்தில் முக்கியமான தேர்தலாக இருக்கும் ஜனாதிபதித் தேர்தலை மாத்திரம் நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையிலேயே இந்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலை மாத்திரம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தம்மிக பெரேரா உள்ளிட்ட நால்வரின் பெயர்களை ஆராய்ந்து வருவதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.