காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் இதுவரையில் காஸாவில் 26,657க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல்களால் அதிகளவில் பாதிக்கப்படுவது குழந்தைகள் என ஐ.நா கவலை தெரிவித்திருக்கின்றது.
காஸாவில் முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள சுகாதாரப் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்ததால் அங்குள்ள குழந்தைகள் நோய்களால் பெரிதும் அச்சுறுத்தப்படுகிறார்கள்.
16,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் வழக்கமான தடுப்பூசிகளை தவறவிடும் அபாயத்தில் உள்ளனர் என்று UNICEF நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அவர்கள் தட்டம்மை, நிமோனியா மற்றும் போலியோ போன்ற நோய்களுக்கு ஆளாகுவதாகவும் அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்தநிலையில் “தாம் ஒவ்வொரு நாளும், 200 முதல் 250 குழந்தைகள் வரை அவசரத் தடுப்பூசிகளை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம், இந்த சவாலான சூழ்நிலைகளில் நாங்கள் எதிர்கொள்ளும் கடுமையான பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு எமக்கு உதவ முன்வாருங்கள்” என சுகாதார பணிகளில் ஈடுபட்டிருக்கும் செவிலியர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.