அரச இரகசியங்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சைபர் வழக்கு என அழைக்கப்படும் குறித்த வழக்கு இன்று ராவல்பிண்டி சிறையில் அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, இதன்போது அமெரிக்காவிற்கான முன்னாள் பாகிஸ்தான் தூதுதர் அனுப்பிய ரகசியங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக இம்ரான் கானை குற்றவாளி என அறிவித்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஏப்ரல் வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவிவகித்த இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து சைபர் வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
அடுத்த மாதம் 8 ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிரான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.