இணையப் பாதுகாப்புச் சட்டமூலத்தை தாமதமின்றி அமுல்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இணைய பாதுகாப்புச சட்டமூலம், சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தாது.
“குறுகிய நோக்கங்களுக்காகவே இவ்வாறு கூறப்படுகின்றது.
பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதை தடுப்பதற்கே இந்தச் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.
சமூக ஊடகங்களை வன்முறை தூண்டும் வகையில் பயன்படுத்தக் கூடாது.
மத உணர்வு, மதங்களுக்கு இடையே மோதல், சிறுவர் துஷ்பிரயோகம், மிரட்டல், வன்முறை, பாலியல் துன்புறுத்தல் போன்ற, செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் இந்த சட்டத்தின் மூலம் வழங்கப்படும்.
உலகின் பிற வளர்ந்த நாடுகள் பின்பற்றும் நடைமுறைகள் மற்றும் தரநிலைகளின்படி இந்த சட்டமூலத்தை நாம் தயாரித்துள்ளோம்.
மேலும், இந்த இணைய பாதுகாப்புச் சட்டம் தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்த பொது பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சர், சர்வதேச ரீதியில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்களுக்கு ஏற்ப தேவையான திருத்தங்களைச் செய்வதற்கும் இணங்கியுள்ளார்.
சட்டம் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்த தேவையான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கூடிய விரைவில் இதனை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் மூலம் இந்த நாட்டிலுள்ள அனைத்து நிராயுதபாணிகளும் அச்சம்; இன்றி சுதந்திரமாக வாழ்வதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.