இன்றிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு, 7.8 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஒன்று தெற்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 53,000 உயிர்கள் காவுவாங்கப்பட்டன.
இந்தநிலையில் ஒரு வருடத்திற்குப் பிறகும் சேதமடைந்த பகுதிகளை புனரமைக்கும் பணிகள் இன்னமும் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் பேரழிவிற்குள்ளான பகுதிகளின் எதிர்காலம் குறித்து பல கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளன.
கடந்த 2023 ஆண்டு பிப்ரவரி 6, அன்று அதிகாலை 4 மணிக்குப் பிறகு ஏற்பட்ட நிலநடுக்கம் 85 வினாடிகள் நீடித்தது. அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 570-க்கும் மேற்பட்ட நில நடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் துருக்கியின் கஹ்ரமன்மாராஸ் மாகாணத்தின் வடக்கே 7.5 அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கியின் சமீபத்திய அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, சுமார் 680,000 வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் மக்கள் வாழ முடியாத அளவிற்கு அந்த கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்பு உபகரண பற்றாக்குறை, சீரற்ற காலநிலை மற்றும் பிரதேசங்களை அடையாளம் காண முடியாமை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தவர்களை தேடும் நடவடிக்கைகளும் தாமதமாகின. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107, 231 ஆக அதிகரிக்கத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.