2024 வரவு- செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய நகர வீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாடி வீடுகளுக்கான வீட்டு உரிமையை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பல்வேறு வீடமைப்பு திட்டங்களின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் குறைந்த வருமானம் பெறுவோருக்கு குத்தகை உறுதி, தவணை உறுதி, உரித்து மற்றும் வாடகை ஆகிய அடிப்படையில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மாடி வீடுகளுக்கு வாடகை அறவிடுதலை கைவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், மேலும், மாடி வீட்டு அலகுகளின் உரிமையை சட்ட ரீதியாக அந்த பயனாளி குடும்பங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.