எரிசக்தித் துறையில் 67 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யத் தீர்மானித்துள்ளதாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோவாவில் இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ”இந்தியாவின் வளர்ச்சிக்கு எரிசக்தி முக்கிய பங்கு வகிப்பதால் அடுத்த 5-6 ஆண்டுகளில் எரிசக்தி துறையில் 67 பில்லியன் அமெரிக்க டொலர்கள், முதலீடு செய்யப்படவுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
அத்துடன் இந்தியாவில் எரிசக்தியின் தேவை 2045ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் மலிவு விலையில் எரிசக்தியினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது 1 கோடி சோலார் கூரை இணைப்புகள் மூலம், நாட்டு மக்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 17 எரிசக்தித்துறைஅமைச்சர்கள் மற்றும் 900க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.