வவுனியா, செட்டிகுளம் பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினையால் தவித்து வந்த குடும்பமொன்றுக்கு பிரான்சில் வசித்து வரும் சமூக செயற்பாட்டாளரான கந்தையா ஸ்ரீமுருகதாஸ் என்பவர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
செட்டிகுளம், முகத்தான்குளம், இரண்டாம் பண்ணையில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வரும் விசேட தேவைக்குட்பட்ட குடும்பமொன்றுக்கே உறவுகளின் பாலம் என்ற அமைப்பின் ஊடாக மோட்டருடன் கூடிய குழாய் கிணறு மற்றும் நீர் தொட்டி என்பன அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.
குறித்த குடும்பத்துக்கு வீட்டுடன் கூடிய வீட்டுத் தோட்டத்திற்கான காணிகள் இருந்துள்ளபோதும் நீர் இன்மை காரணமாக அவர்களால் வீட்டுத் தோட்டத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அக் குடும்பத்தின் தலைவி, தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவதற்கும், தனது மூன்று பிள்ளைகளையும், விசேட தேவைக்குட்பட்ட கணவரை கவனித்துக் கொள்வதற்காகவும் நாளாந்தம் கூலி வேலைக்கு சென்றுவந்துள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த குடும்பத்துக்கு உதவும் விதமாக குடிநீர் திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
செட்டிகுளம், முகத்தான்குளம் கிராம அலுவலர் எஸ்.ரஞ்சினி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் இ.பிரதாபன், செட்டிகுளம் பிரதே செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜன், ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், கி.வசந்தரூபன், திருமதி சி.திவியா, வ.பிரதீபன், சமூக செயற்பாட்டாளர் திருமதி ஹெலன்மேரி மற்றும் அப்பகுதி மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.