கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக சேவையாற்றிய றூபவதி கேதீஸ்வரனுக்கு மணிவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திலேயே கல்வி பயின்று அம்மாவட்டத்தில் தனது சேவைக்காலத்தினை நிறைவு செய்யும் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் எதிர்வரும் 13ம் திகதியுடன் ஓய்வு பெறுகின்றார்.
கிளிநொச்சி மாவட்டம் தனி மாவட்டம் ஆக்கப்பட்ட பின்னர் அம்மாவட்டத்தில் கல்வி பயின்று அரச நிர்வாக சேவைக்கு தெரிவான முதலாவது அரச நிர்வாக சேவை அதிகாரி இவர் என்பது இங்கு விசேட அம்சமாகும்.
இலங்கை அரச நிர்வாக சேவையில் ஒரு பெண்ணாக துணிந்து நின்று 32 ஆண்டுகள் கடமையை நிறைவேற்றியதுடன், கிளிநொச்சி மாவட்டத்தின் முதல் பெண் அரச அதிபருமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
முன்னேறத் துடிக்கும் பெண்களிற்கு எடுத்துக்காட்டாகவும், துணிச்சல் மிக்க பெண்ணாகவும், பல்வேறு நெருக்கடிகளை கடந்து துணிச்சலுடன் பயணித்து மணிவிழா காணும் றூபவதி கேதீஸ்வரனின் பணிகளையும், சேவைகளையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அவரது சேவையைப் பாராட்டும் வகையில் மணிவிழாவினை எதிர்வரும் 13ம் திகதி கிளிநொச்சிக் கூட்டுறவுச் சபை மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள்; இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.