ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி வீரர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
குசல் மெண்டிஸ் இலங்கை அணியை தொடர்ந்து வழிநடத்தும் அதே வேளையில் அவருக்கு துணையாக சரித் அசலங்கா பணியாற்றுவார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இலங்கையின் முன்னாள் தலைவர் தசுன் சானக மற்றும் சிம்பாப்வேக்கு எதிரான தொடரில் விளையாடிய ஜெப்ரி வாண்டர்சே அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
சானகவுக்குப் பதிலாக சகலதுறை ஆட்டக்காரர் சமிக கருணாரத்னவும் வன்டர்சேயின் இடத்திற்கு ஹசரங்கவும் இடம்பெற்றுள்ளனர்.
இதேநேரம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிட்ட பதும் நிசாங்க மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
சானகா, வான்டர்சே மற்றும் நுவணிந்து பெர்னாண்டோ ஆகியோரைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ளனர்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.