சிறு குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை, செவிப்புலன் மாற்று அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவற்றிற்கு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியுதவி வழங்கப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், ராகம போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சிறு குழந்தைகளின் கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சை மற்றும் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும் செவிப்புலன் மாற்று சத்திரசிகிச்சை என்பவற்றுக்காக ஜனாதிபதி நிதியில் இருந்து நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டின் எதிர்கால நலனுக்காகவும் வறிய பெற்றோர்களின் நலனுக்காகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
வட கொழும்பு பொது வைத்தியசாலையில் (ராகம போதனா வைத்தியசாலை) மேற்கொள்ளப்படும் சிறு குழந்தைகளின் (16 வயதிற்குட்பட்ட) கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்கான அதிக செலவைக் கருத்தில் கொண்டு, சாதாரண மற்றும் ஏனைய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக 01-01-2024 முதல் ஜனாதிபதி நிதியில் இருந்து ஒரு மில்லியன் ரூபாய் (ரூ. 1,000,000இலட்சம்) வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த அறுவைச் சிகிச்சைகள் ஒரு சில அரசாங்க மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுவதால், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் அரச மருத்துவமனைகளில் இதற்காக காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டியுள்ளது.
இதனையடிப்படையாகக் கொண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் இந்த சத்திரசிகிச்சைக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.