சிங்கள தேசத்தில் கரைந்து செல்லும் கிழக்கைப் பாதுகாக்க கிழக்குடன் வடக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் விழிப்படைய வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஊடக கற்கை வளநிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களின் போராட்டம் கருணா, பிள்ளையான் ஆகியோரின் உச்சக்கட்டப் பிரதேசவாதம் ஊடாக அழிக்கப்பட்டது.
அவ்வாறு மீண்டும் பிரதேசவாதம் ஊடாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அழித்து ஒழிப்பதற்காகச் செயற்பட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற போலி முகங்களை மக்கள் இனங்கண்டு ஒரங்கட்டவேண்டும்.
பிள்ளையானும் சில முஸ்லீம் அரசியல் கட்சித் தலைவர்களும் வடக்கு கிழக்கு இணையக் கூடாது எனத் தெரிவித்து அவர்களின் அரசியலை அரங்கேற்றி வருகின்றனர்.
வடக்கு கிழக்கிலே உரிமைக்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் உயிர்த் தியாகம் செய்த நிலையில் இப்படிப்பட்ட குறுகிய இலாபங்களுக்காக பிரதேசவாதங்களைப் பேசி மக்களைச் சிதைக்கின்ற இந்த தரப்புக்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அதேவேளை இவ்வாறான சூழ்நிலையிலே தமிழ் மக்களின் தேசமாக வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும்.
எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் இந்த பிரதேசவாதத்திற்குத் துணைபோக மாட்டோம் என்று தமிழர்கள் கிழக்கு மாகாணத்திலே ஒரு உறுதியான நிலை எடுக்கவேண்டும்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.