மக்களின் நலன் கருதி அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களும் போராட்டத்தை கைவிடுமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது”அனைவரையும் பணிக்கு திரும்புமாறும் அழைப்பு விடுக்கின்றேன்.
ஒவ்வொரு தொழில் வல்லுநர்களும் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள். சுகாதார சேவையின் மேம்பாட்டிற்கு சுகாதார பணியாளர்கள் நாட்டிற்கு பாரிய சேவையை வழங்குகின்றனர். வைத்தியர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு வழங்கும் விவகாரம் எல்லா காலத்திலும் பிரச்சனையாகவே காணப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 1300 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அனைத்து அரச ஊழியர்களும் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு 10 ஆயிரம் ரூபாயால் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.அதில் ஒரு பகுதி ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு முழுத் தொகையும் கிடைக்கும்.
ஏப்ரல் மாதத்தில் அரச ஊழியர்களுக்கு நிதி அமைச்சு இரண்டு சம்பளம் வழங்க வேண்டும்.
அந்த சூழ்நிலைகள் குறித்து நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தநிலையில், நாட்டு மக்களை கவனத்தில் கொண்டு தொழில் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நாட்டு மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு உதவுமாறும் சுகாதார அமைச்சு என்ற வகையில் அனைத்து தொழில் வல்லுநர்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.