இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ வலியுறுத்தியுள்ளார்.
வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மீதான, அனுதாப பிரேரணை மீதான உரை இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட கொலையா? அல்லது சாதாரண விபத்தினால் இந்த மரணம் இடம்பெற்றதா என்பதை விரைவாக ஆராய்ந்து, குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தின் காரணமாகவே அவரது மனைவி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சமூக ஊடகங்களிலும் இது தொடர்பாக விவாதம் இடம்பெற்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை விரைவாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சதி திட்டம் இடம்பெற்றிருந்தால் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்”இவ்வாறு ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.