தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வுப் பணிக்கு அப்பகுதி மக்களால் நேற்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
தலைமன்னார் இறங்கு துறை, தலைமன்னார் ஊர் மனை, தலைமன்னார் ஸ்டேஷன் பகுதி மக்கள் ஒன்றிணைந்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
எவ்வித அனுமதி இன்றியும், மக்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்கள் வழங்கப்படாமலும் தான் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக குறித்த குழுவினர் வருகைத் தந்துள்ளனர் என பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அப்பகுதிக்கு வருகை தந்த மணல் பரிசோதனை குழுவினர் தாங்கள் ஒரு ஒப்பந்த நிறுவனம் என்று தெரிவித்துள்ளதோடு, எதிர்ப்பினை வெளியிட்ட பொது மக்களுக்கும் தமது ஒப்பந்தத்தினை காண்பித்துள்ளனர்.
இந்தச்சம்பவமானது அங்கு பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்திய நிலையில், தலைமன்னார் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்து நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டனர்.
எனினும், மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்ட நிலையில், மணல் அகழ்விற்காக வருகைத் தந்திருந்த குழுவினர் அங்கிருந்து வெளியேறினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.