தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கடைப்பிடித்த குற்றச்சாட்டில் இருந்து வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடை தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டதுடன் அவர் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2020 செப்டெம்பர் 15ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள், தியாக தீபம் திலீபனுக்கு யாழ்ப்பாணம் கோண்டாவில் கோகுல வீதியில் நினைவேந்தல் நடத்தினார்.
இது 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விதிகளை மீறிய குற்றம் என சிவாஜிலிங்கத்திற்கு எதிராக சட்டமா அதிபர் கடந்த 2022ஆம் ஆண்டு இந்த வழக்கை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.