நாட்டின் ”உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உத்தேச சட்ட வரைபு” தொடர்பான இரண்டு கலந்துரையாடல்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
முதலாவது கலந்துரையாடலில் ஹிமாலயன் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். இரண்டாவது கலந்துரையாடலில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பிற சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதில் நாட்டில் தேசிய நல்லிணக்கத்திற்கான உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் தற்போதைய வேலைத் திட்டங்கள் குறித்தும் இந்த சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான உத்தேச சட்டமூலம் குறித்தும் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது.
கலந்துரையாடலில் இணைந்திருந்த நபர்கள் அதற்கு முழுமையாக பங்களிப்பதோடு ஆலோசனைகளையும் யோசனைகளையும் முன்வைத்தனர். குறிப்பாக 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிய நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிபிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் அதனை ஒரு சுயாதீனமான நிறுவனமாக உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் முறையாக தகவல்களைத் திரட்டல், வன்முறைகளின் போது நடந்த விடயங்களை அறிக்கையிடல்,
மற்றும் கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க பரிந்துரை வழங்குதல் மற்றும் மோதலுக்குப் பிந்தைய இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பாரபட்சமற்ற அமைப்பாகப் பயன்படுத்துவது இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.