சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளடக்கப்பட்டிருந்தது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு விவாதிக்கப்படும். இதன்படி எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னரான ஒரு நாளில் குறித்த பிரேரணையை விவாதம் செய்ய முடியும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எவ்வாறாயினும், எதிர்வரும் 19ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள நிலையில், குறித்த வாரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கட்சித் தலைமைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். நாளை அல்லது 18ஆம் திகதி மீண்டும் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சபாநாயகர் அலுவலகம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இணையவழி அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தது.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 44 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லாப் பிரேரணை அண்மையில் நாடாளுமன்றத்தின் பதில் பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.