வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக 60 இலட்ச ரூபாய் பணத்தினை நபர் ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயது யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊரெழு பகுதியை சேர்ந்த குறித்த பெண் , யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில் , வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கல் , விசா தொடர்பிலான தெளிவூட்டல்கள் போன்ற சேவைகளை கட்டணம் பெற்று வழங்கி வந்துள்ளார்.
அவரை நம்பி யாழ்ப்பாணத்தின் பல பாகங்களை சேர்ந்தவர்களும் பணத்தினை வழங்கி வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் சுமார் 60 இலட்ச பணத்தினை வழங்கியுள்ளார்.
பணத்தினை வழங்கியவர் தனது வெளிநாட்டு , பயண ஏற்பாடுகள் தாமதமாகி வந்தமையால், அப்பெண் மீது சந்தேகம் கொண்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ் . பொலிஸார் , அப்பெண்ணை கைது செய்தனர்.
மேலும் குறித்த பெண்ணின் வங்கி கணக்கின் ஊடாக சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான பண பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பில் குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.