சாந்தனின் உடல் இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்களுக்கும்; தமிழகத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான கசப்புணர்வை அதிகப்படுத்தியிருக்கின்றது. அதை இலங்கை அரசாங்கம் விரும்பியிருந்திருக்கும்.அந்த உடல் வடக்கிற்கு கொண்டுவரப்பட்ட அதே காலப்பகுதியில்,இம்மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் மூன்று தீவுகளில் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை இந்தியக் கொம்பனிகளுக்கு வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்தாகியது.அவை முன்பு சீனக் கொம்பனிகளுக்கு வழங்கப்படவிருந்தன. இந்தியா அதை விரும்பவில்லை, அதைத் தடுக்கின்றது என்று சீனா மறைமுகமாகக் குற்றம் சாட்டியது. எனினும் நீண்ட இழுபறியின் பின் கடந்த முதலாம் தேதி தான் அதற்குரிய உடன்படிக்கை கைச்சாத்தாகியது. புதிய உடன்படிக்கையின்படி நெடுந்தீவு,அனலைதீவு, நைனா தீவு ஆகிய மூன்று தீவுகளிலும் இந்தியக் கொம்பனிகள் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி நிலையங்களை ஸ்தாபிக்கும்.அவ்வாறு மூன்று தீவுகளில் இந்திய கொம்பனிகள் கால் பதிக்க உள்ள பின்னயில்,கடந்த வாரம் இந்திய மீனவர்களுக்கு எதிராக ஈழத்தமிழ் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றார்கள்.எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது?
சாந்தனின் இறுதி ஊர்வலம் அண்மை ஆண்டுகளில் வடக்கில் நிகழ்ந்த ஒப்பீட்டளவில் அதிகம் சனம் சேர்ந்த ஓர் இறுதி ஊர்வலம் எனலாம். வவனியாவிலிருந்து எல்லங்குளம் வரையிலும் மக்கள் தன்னார்வமாக சாந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இறுதி ஊர்வலத்தை அரசியல் கைதிகளுக்கான அமைப்பாகிய “குறையற்றவர்களின் குரல்” என்ற அமைப்பும் “போராளிகள் நலன்புரிச் சங்கம்” என்ற அமைப்பும் பொறுப்பெடுத்தன.அந்த ஊர்வலம் வந்த வழிநெடுக பொதுமக்கள் அமைப்புகள் ஆங்காங்கே திரண்டு அஞ்சலி செலுத்தின. குறிப்பாக வடமராட்சியில் சாந்தனின் தாய்ப் பட்டினத்தில் சனசமூக நிலையங்கள் அதிகம் பங்களிப்பை நல்கின.சாந்தன் உயிரோடு நாடு திரும்பி இங்கே உயிர் நீத்து இருந்திருந்தால்,அவருக்கு இத்துணை அனுதாபம் கிடைத்திருக்குமோ தெரியாது.அவர் உயிரற்ற உடலாகத் திரும்பி வந்தமைதான் அவருக்கு கிடைத்த அதிகரித்த அனுதாபத்துக்கு ஒரு காரணம். 33 ஆண்டுகளாக சிறையில் இருந்தவர், தன் தாயைப் பார்ப்பதற்குத் தவித்திருந்த கடைசி நாளில் உயிர் நீத்தமை என்பது அவர் மீதான அனுதாபத்தை; அவரின் உடல் மீதான மதிப்பை அதிகப்படுத்தியது.அதுதான் வவனியாவில் இருந்து எல்லங்குளம் வரையிலும் அவருக்கு கிடைத்த மரியாதை.
ஆனால் சாந்தனுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது அதோடு முடியவில்லை.அவரோடு ஒன்றாகச் சிறப்பு முகாம்களில் இருந்த மேலும் மூவர் இதுவரை விடுவிக்கப்படவில்லை. அவர்களைப் போல பல ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாம்களில் இப்பொழுதும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். கிடைக்கும் புள்ளி விவரங்கள் சரியாக இருந்தால் மொத்தம் நூற்றுக்கும் குறையாத கைதிகளில் சுமார் 70-க்கும் குறையாதவர்கள் ஈழத் தமிழர்கள் என்று கூறப்படுகின்றது.இந்த 70-க்கும் குறையாத ஈழத் தமிழர்களில் பல்வேறு விதமான குற்றங்களை செய்தவர்களும் உண்டு.அரசியல் கைதிகளும் உண்டு. போதைப்பொருள் வியாபாரிகளும் உண்டு.தவிர சிறிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்களும் உண்டு.உதாரணமாக ஆதார் அட்டை இல்லாமல் வாகன அனுமதிப்பத்திரம் எடுத்தவர், வெளிநாடு போக முற்படும் ஈழத் தமிழர்களுக்கு பொய்யான ஆவணங்களைத் தயாரித்துக் கொடுப்பவர் போன்றவர்களும் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது.
இந்தியாவில் சிறப்பு முகாம் என்று தோற்றப்பாடு மாநில அரசாங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. ஒரு மாநிலத்தில் உரிய பயண ஆவணம் இன்றித் தங்கியிருக்கும் வெளிநாட்டவரை அந்த மாநிலம் தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதற்கான ஏற்பாடு அது. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலை, பத்மநாபா படுகொலை போன்ற சம்பவங்களின் பின்னணியில் தமிழக சிறப்பு முகாம்கள் எனப்படுகின்றவை ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை கொடுமையான அனுபவங்களாகக் கருதப்படுகின்றன.
சிறப்பு முகாம்களில் மட்டுமல்ல,வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் பெயரில் தமிழகத்தில் கைது செய்யப்படும் ஈழத் தமிழர்கள் கௌரவமாக நடத்தப்படுவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் உண்டு.அவர்கள் வெளிநாட்டவர்களுக்குரிய மரியாதையோடு நடத்தப்படுவதில்லை என்றும்,அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கூறுகிறார்கள். ராஜீவ் காந்தி படுகொலை, பத்மநாபா படுகொலை ஆகிய சம்பவங்களின் பின்னர் தமிழகத்தில் கைது செய்யப்படும் ஈழத்தமிழர்கள் கௌரவமாக நடத்தப்படுவதில்லை என்பது ஒரு பொதுவான அவதானிப்பு.தவிர புலம்பெயர்ந்த தமிழர்கள் காசை அள்ளி வீசி எல்லாவற்றையும் செய்யலாம் என்று நம்பும் ஒரு பின்னணியில்,ஈழத் தமிழ் கைதிகளை வைத்து அதிகம் உழைக்கலாம் என்ற நம்பிக்கையும் அங்கே உண்டு.
இவ்வாறானது ஒரு பின்னணியில்,சாந்தனின் மரணத்தை முன்வைத்து ஒரு அடிப்படையான விஷயத்தை இங்கே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. பொதுவாக ஒரு நபர் ஒரு வெளிநாட்டில் கைது செய்யப்படும் பொழுது,அவருடைய நலன்களை அவருடைய தாய் நாட்டின் தூதரகம்தான் பொறுப்பேற்கும். வடகடலில் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள உப தூதரகமும் கொழும்பில் உள்ள பிரதான தூதரகமும் பொறுப்பேற்கின்றன. அவர்களுடைய நலன்களை இந்தியத் தூதரகம்தான் கவனிக்கும்.
உலகம் முழுவதிலும் இதுதான் வழமை.தமிழகத்தில் இலங்கைக்கான உப தூதரகம் உண்டு. அங்கே தமிழ் அதிகாரிகளும் உண்டு. ஆனாலும் தமிழகத்தில் கைது செய்யப்படும் ஈழத் தமிழர்களின் விடயத்தில் மேற்படி உப தூதரகம் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அளவுக்குத் தலையிடுவது கிடையாது. அங்கே ஈழத் தமிழ் கைதிகள் நடத்தப்படும் விதத்தைத் தொகுத்துப் பார்த்தால்,ஒரு விமர்சகர் கூறுவது போல,அவர்கள் அரசியல் அனாதைகளாகக் காணப்படுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.சாதாரண கைதிகளின் நிலைமையை இப்படி என்றால் அரசியல் கைதிகளின் நிலைமையைச் சொல்லத் தேவையில்லை.
இப்படிப்பட்டதோர் பின்னணியில்,தமிழகத்தில் கைது செய்யப்படுகின்ற அல்லது சிறப்பு முகாமும் உட்பட வெவ்வேறு சிறைகளில் சிறை வைக்கப்பட்டிருக்கின்ற ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு ஒரு பலமான சட்ட உதவி மையத்தை தமிழகத்தில் திறக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் இருந்து ஒரு கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.ஈழத் தமிழர்களிடம் நிதிப்பலம் மிக்க ஒரு புலம்பெயர் சமூகம் உண்டு. புலம்பெயர் சமூகத்தின் நிதிப் பங்களிப்போடு தமிழகத்தில் அவ்வாறு ஒரு சட்ட உதவி மையத்தை உருவாக்கினால் என்ன? அச்சட்ட உதவி மையத்தில் வேலை செய்வதற்கு அங்கே பல சட்டத்தரணிகள் தயாராக இருக்கிறார்கள்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னரும், பத்மநாபாவும் அவருடைய தோழர்களும் கொல்லப்பட்ட பின்னரும், தமிழகத்தில் ஈழ உணர்வாளர்கள் தீக்குளித்திருக்கிறார்கள்.அது மட்டுமல்ல,சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை தமிழகத்தில் உள்ள சில உணர்வாளர்கள் சந்திப்பதுண்டு.மேலும் சாந்தனும் உட்பட ஈழத்து அரசியல் கைதிகளின் வழக்குகளில் தோன்றுவது தமிழகத்தில் உள்ள ஈழ உணர்வானர்களான வழக்கறிஞர்கள்தான்.சாந்தனின் உடலை பொறுப்பெடுத்து நாட்டுக்கு கொண்டு வந்ததும் அப்படி ஒரு வழக்கறிஞர்தான்.
எனவே சாந்தனின் இழப்பை முன்வைத்து தமிழகத்தில் அவ்வாறு ஒரு பலமான சட்ட உதவி மையத்தை உருவாக்குவதைக் குறித்து ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். குறிப்பாக சிறப்பு முகாம்களில் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை வெளிப்பதிவு அகதிகளாக மாற்ற வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் வைக்கப்படுகிறது.
சாந்தனும் உட்பட அரசியல் கைதிகளின் விடயத்தில் ஈழத்து தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு. அது மட்டுமல்ல, இவர்களில் பலர் தமிழகத்திற்கு செல்வதுண்டு அங்கே தமிழக பிரபல்யங்களை கண்டு அவர்களோடு படம் எடுத்துக் கொள்வதும் உண்டு.ஆனால் இவர்களில் எத்தனை பேர் சிறைகளுக்கும் சிறப்பு முகாம்களுக்கும் அகதி முகாம்களுக்கும் சென்றிருக்கிறார்கள்? அகதிகளோடு படம் எடுத்திருக்கிறார்கள்? ஈழத் தமிழ் கைதிகளை அவர்களுடைய அரசியல் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை என்று சொன்னால், தமிழக அரசு அவர்களை எப்படி மதிக்கும்?
எனவே இப்பொழுது தமிழகத்தில் மிஞ்சியிருக்கும் அரசியல் கைதிகளும் உட்பட ஏனைய ஈழத் தமிழ் கைதிகளின் விடயத்தில்,தமிழ் அரசியல் சமூகம் தெளிவான சில முடிவுகளை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று தமிழகத்துக்கு சென்று அங்குள்ள கைதிகளோடு உரையாட வேண்டும். மேலும் அங்கு உள்ள ஈழ உணர்வாளர்களின் உதவியோடு ஒரு சட்ட உதவி மையத்தை உருவாக்க வேண்டும்.அதுதான் நடைமுறைச் சாத்தியமான வழி.அதுதான் உடனடிக்குச் செய்ய வேண்டிய வேலையும். அதுதான் சாந்தனுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியும்.