நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் காலியை பிரதான சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி, ஹோலுவாகொட ‘செரின் ரிவர் பார்க்’ சூழலியல் பூங்காவை நேற்று திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்தத் திட்டம் ஒரு பொருளாதார மேம்பாட்டுத் திட்டமாகும்.
நாம் இதுபோன்ற திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். இன்று காலி, முக்கிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.
அதை நாம் மேலும் மேம்படுத்த வேண்டும்.
இதன் மூலம் இப்பகுதி மக்கள் பெருமளவு வருமானம் பெற முடியும். சுற்றுலா துறையில் தென் மாகாணத்திற்கு ஒரு சிறப்பிடம் உள்ளது. காலி கோட்டையில் உள்ள அனைத்து அரச அலுவலகங்களையும் அகற்றி சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சுற்றுலாத்துறை என்பது நாட்டிற்கு விரைவாக வருமானம் தரும் துறையாகும். வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று யாரும் கடந்த காலத்தில் நினைக்கவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எரிபொருள் இருக்கவில்லை. உரமோ மருந்தோ இல்லை. இன்று அனைத்தும் இருக்கிறது. அதேபோன்று இன்று மக்கள் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.