வடமாகாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எதிர்வரும் ஏப்ரல், மே, ஜுன், மற்றும் ஜூலை மாதங்களில் வெப்பநிலை தற்போது உள்ளதை விடவும் உயர்வாக இருக்கும். வடக்கு மாகாணத்தின் நேற்றைய தினம் திங்கட்கிழமை, சராசரி வெப்பநிலை 31 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் நாளின் அதி கூடிய வெப்பநிலை ( Maximum Temperature) 36 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. உணரக்கூடிய வெப்பநிலை( Feel Temperature ) 34 பாகை செல்சியஸ் ஆக இருந்துள்ளது.
இந்த நிலைமை அடுத்து வரும் நாட்களில் இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை வடக்கு மாகாணத்தின் சராசரி ஆவியாக்க அளவு 11 மி.மீ. ஆகும். சில இடங்களில் சராசரியை விட மிக உயர்வாக பதிவாகியுள்ளது. எனவே ஒரு நாளின் ஆவியாக்க அளவே, 11 மி.மீ. என்றால் ஒரு மாதத்தின் 30 நாளுக்கான ஆவியாக்க அளவு 330 மி.மீ. ஆகும்.
இவ்வாண்டு மார்ச் மாதம் இதுவரை 1 மி.மீ. மழை கூடக் கிடைக்கவில்லை. எதிர்வரும் 21ஆம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரையிலான தினங்களில் வெப்பச்சலன செயற்பாட்டால் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைவிட மார்ச் 28 முதல் ஏப்ரல் 8 வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கடும் வெப்பநிலை காரணமாக ஏற்படும் கடுமையான ஆவியாக்கம் எமது தரை மேற்பரப்பு மற்றும் தரைக் கீழ் நீர்நிலைகளின் நீரின் அளவை கணிசமான அளவு குறைக்கும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தரைக்கீழ் நீரின் அளவு சடுதியாக குறைவடைந்து செல்கின்றது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு பின்னரே தரைக்கீழ் நீரை மீள் நிரப்பக்கூடிய கன மழைக்கு வாய்ப்புண்டு”
எனவே நிலவுகின்ற வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையற்ற நீர் விரயத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்” இவ்வாறு யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.