ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் ஐந்து பாதாள உலகக் குழுவின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மினுவாங்கொடை பன்சிலுபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி மினுவாங்கொடை – பொரகொடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை, வாழைத்தோட்டம், செபஸ்டியன் வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மேலும் ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடம் இருந்து 05 வாள்கள் மற்றும் 02 கிராம் 680 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் வெளிநாட்டில் இருந்து வழிநடத்தப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் கொலன்னாவ பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 03 கிராம் 190 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்று பிற்பகல் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமித்ராராம வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 168 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலை சேர்ந்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, நேற்று மாலை பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிராம் 230 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.