நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துவதாகவும், எனவே எதிர்காலத்தில் அவரது தலைமை நாட்டுக்குத் தேவை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை ”24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும நிவாரணங்களை வழங்கிய பின்னர், அதுகுறித்து மீளாய்வு செய்யப்பட்டு அந்தப் பணிகள் உறுதிசெய்யப்படும் என்றும், மேலும் 24 இலட்சம் பயனாளிகளைத் தேர்வு செய்த பிறகு, அவர்கள் தொடர்பில் தொடர்ந்து மீளாய்வு செய்ய எதிர்பார்ப்பதாகவும் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் அஸ்வெசும மூலம் வழங்கப்பட்ட பணத்தை எதற்காக செலவு செய்தார்கள்? என்றும் இது எதிர்காலத்தில் வலுவூட்டும் திட்டத்திற்கு எந்த அளவிற்கு பங்களிக்கிறது? மற்றும் இதன் ஊடாக அவர்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.