ஐக்கிய மக்கள் சக்தியும் சுதந்திர மக்கள் முன்னணியும் இணைந்து இன்று புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளன. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர மக்கள் முன்னணி ஆகியவற்றுக்கிடையிலான கூட்டணி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்புடனான இந்த புதிய அரசியல் கூட்டணியில் சுதந்திர மக்கள் முன்னணியின் 6 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டனர்.
அதற்கிணங்க, பேராசிரியர ஜீ.எல். பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, உபுல் கலப்பதி, வசந்தயாப்பா பண்டார மற்றும் கே.பீ.எஸ். குமாரஸ்ரீ ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இந்தக் கூட்டணியானது எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் தொலைப்பேசி சின்னத்தில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.