”இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தொடங்கி 6 மாதங்களைக் கடந்துள்ள நிலையில்,பணய கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது” என இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேலில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தினையடுத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாம் வெற்றிபெற இன்னும் ஒருபடியே எஞ்சியுள்ளது. ஆனால், வெற்றிக்காக நாம் கொடுத்த விலை வலி நிறைந்ததாக உள்ளது.
பணய கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது. பணய கைதிகள் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் தயாராக உள்ளது. ஆனால், சரணடைய இஸ்ரேல் தயாராக இல்லை.
எனவே சர்வதேச நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அது பணய கைதிகள் விடுதலைக்கான முயற்சிகளை அதிகரிக்கும். எங்களை யார் தாக்கினாலும், தாக்க நினைத்தாலும் நாங்கள் அவர்களை தாக்குவோம்” இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.