ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமையைப் பிரகடனப்படுத்தி 2020ஆம் ஆண்டு சிறிகொத்தவைக் கைப்பற்ற தயாரான ஜக்கிய மக்கள் சக்தி, இன்று மொட்டுக் கட்சித் தலைவர் உள்ளிட்டோருக்கு அடிபணிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கடந்த காலத்தில் அரசியல் கட்சிகளில் பிளவுகள் ஏற்பட்டன. மொட்டுக் கட்சியில் இருந்து சிலர் எதிர்க்கட்சிக்கு சென்றனர். இப்போது அந்தக் குழு ஐக்கிய மக்கள் சக்தியை வழிநடத்துகிறது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தாங்கள் சிறிகொத்தாவைக் கைப்பற்ற வேண்டும் என்று 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி என்று அழைக்கப்படும் குழு தற்போது மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசியக் கட்சி இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாத்தவன் நான்.
ஜே.ஆர் ஜயவர்தன, ஆர், பிரேமதாச, டி.பி. விஜேதுங்க, இவர்கள் அனைவருடனும் நாங்கள் பணியாற்றினோம்.
இன்று ஐக்கிய தேசியக் கட்சி என்று தங்களை அழைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த உரிமையும் இல்லை. இன்று எமக்கு பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. நாட்டு நலனுக்காக நாம் இணைந்து செயற்பட வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.