பாலர் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று விபத்தில் சிக்கியதில், 6 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சோக சம்பவமொன்று இன்று (11) காலை ஹரியானாவில் பதிவாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் நர்னால் பகுதிக்கருகில் உள்ள கிராமத்திலுள்ள மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 6 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், 12 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுகாயதடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜி.எல் பப்ளிக் (GL Public School) பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றுக்கொண்டுச் சென்ற குறித்த பாடசாலை பஸ், கனினாவின் உன்ஹானி கிராமத்துக்கருகில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின்போது பஸ்ஸின் சாரதி குடிபோதையில் இருந்தாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், ரம்ஜான் தினமான இன்று விடுமுறை அளிக்காமல், பாடசாலை நடத்தப்பட்டமை குறித்தும், பாடசாலை நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான பாடசாலை பஸ்ஸின் தகுதிச்சான்றிதழ் 2018 ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.