முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகமானது அலுவலக நேரத்திற்கு முன்னராக மூடப்படுவதாகவும் இதனால் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அராய்வதற்காகவும், சேவையொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காகவும், எமது ஊடகவியலாளர் ஒருவர் சென்றிருந்த நிலையில், அங்கு பொதுமக்கள் கூறுவதைப் போன்று அலுவலக செயற்பாடுகள் 3.30 மணியளவில் நிறைவடைவதையும் அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுவதையும் அவதானித்துள்ளார்.
இதனை அவர் காணொளியாகப் பதிவு செய்துள்ளதோடு, இது தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளார்.
அரச திணைக்களங்கள் பி.ப 4.15 மணிக்கு மூடப்பட வேண்டும் என அண்மையில் ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன், சுற்று நிருபமும் வெளியிடப்பட்டிருந்தது.
பொதுமக்கள் சேவையை இலகுபடுத்தும் திட்டங்கள் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படுகின்ற போதிலும் இவ்வாறான பொறுப்பற்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்ந்தவாறே உள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை, ஏனைய திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகள், உத்தியோகத்தர்களிற்கு படிப்பினையாக அமைய வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.