பண்டாரவளை – தியத்தலாவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற கார்பந்த விபத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தியத்தலாவ கார் பந்தயத்தின் போது கார் ஒன்று ஓடு பாதையை விட்டு விலகி ஓடு பாதைக்கு வெளியே நின்ற பார்வையாளர்கள் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த 7 பேரில் 4 பந்தய உதவியாளர்களும், 8 வயது மற்றும் 9 வயது சிறார்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய முத்துசாமி உதயகுமார், 8 வயதுடைய சிவகுமார் தனுஷிகா, சீதுவை பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சமத் நிரோஷன், அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ரசிக அபேநாயக்க, மாத்தறையைச் சேர்ந்த 62 வயதுடைய சாந்த உபாலிகமகே, அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய அசேன் ஈனடிகல, மாத்தறையைச் சேர்ந்த 60 வயதுடைய ஜயவர்தன ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில், தியத்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பந்தயம் இறுதியாக கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், அன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதன்படி 5 வருடங்களாக போட்டிகள் நடத்தப்படாத நிலையில் நேற்று இந்தப் போட்டி நேற்று நடைபெற்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.